பஹல்காம்: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்த லஷ்கர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவரின் வீடுகள் வெடிப்பில் அழிக்கப்பட்டதாக என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.
அடில் ஹுசைன் தோக்கர், ஆசிஃப் ஷேக் இருவரின் வீடுகளும் தனித்தனி வெடிப்புகளில் அழிந்துபோயின. அவர்கள் வீட்டில் வெடிபொருள்கள் வைக்கப்பட்டதாக தகவல் தெரிந்தோர் குறிப்பிட்டனர்.
அவ்விருவரும் பஹல்காம் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது.
ஆசிஃப் ஷேக்கின் வீடு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) இடிக்கப்பட்டதாக முன்னதாக செய்தி வெளியானது. காஷ்மீரின் பண்டிப்போரா பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த மேல்விவரங்கள் பின்னர் வழங்கப்படும் என்று இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீதும் பயங்கரவாதிகள் மீதும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடப்பில் இருந்த இண்டஸ் நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்தியா முன்னதாக அறிவித்திருந்தது.
பயங்கரவாதம், பயங்கரவாத முகாம்கள் மீது திட்டவட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 24) இந்தியாவில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குரல் கொடுக்கப்பட்டது. அதேவேளை, 26 பேரைப் பலிவாங்கிய பஹல்காம் தாக்குதலுக்குப் பாதுகாப்பு அம்சங்களில் இருந்த குறைபாடுகள் காரணம் என்று கூட்டத்தில் சில எதிர்க்கட்சிகள் சுட்டின.
இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியின் (LoC) பல இடங்களில் வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அது, அப்பகுதியில் நடப்பில் இருந்துவரும் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
அதற்குப் பதிலடியாக இந்தியாவும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் அறிந்த சிலர் குறிப்பிட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய ராணுவத் தலைவர் ஜெனரல் உப்பேந்திர துவிவேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீநகர், உதம்பூர் ஆகிய நகரங்களுக்குப் போகத் திட்டமிட்டுள்ளார். அதற்கு சில மணிநேரத்துக்கு முன்பு இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.
எல்லைக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு நிலவரம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக நம்பப்படுவது ஆகியவை பற்றி ஜெனரல் உப்பேந்திர துவிவேதி, அங்கு உள்ள மூத்த ராணுவத் தளபதிகளுடன் கலந்துபேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.