பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்தே திட்டமிடப்பட்டது: என்ஐஏ

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்தே திட்டமிடப்பட்டது: என்ஐஏ

2 mins read
6523e7a9-7a0e-44e0-9c7d-550d565f0b28
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட திடீர்த் தாக்குதல் இந்தியாவையே உலுக்கியது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவின் ஜம்மு-கா‌ஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் 2025ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டனர்.

அச்சம்பவம் தொடர்பாக 1,113 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

“பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்தே திட்டமிடப்பட்டது. லாகூரில் பதுங்கியிருந்து வாட்ஸ்அப் மூலம் தாக்குதலை வழிநடத்தி உள்ளனர். லஷ்கர் தளபதி சாஜித் ஜட் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்,” என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் காஷ்மீரிகள் இருவர் அடைக்கலம் தந்துள்ளனர். ஆபத்தை முன்பே அறிந்தும், உள்ளூர் குதிரை ஓட்டுநர்கள் உண்மையை மறைத்துள்ளனர். பயங்கரவாதிகளின் கைப்பேசி பாகிஸ்தானின் லாகூர், கராச்சியில் வாங்கப்பட்டவை.

இதுபோன்று பல்வேறு தகவல்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டது லஷ்கர்-இ-தொய்பா என்பதும் தாக்குதலில் ஈடுபட்டவர்களும் அதே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆறாத வடு

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட திடீர்த் தாக்குதல் இந்தியாவையே உலுக்கியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.

பாகிஸ்தான் ஆட்சிக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பயங்கரவாதிகள் பதுங்கும் இடங்கள், பயங்கரவாதப் பயிற்சி அளிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.

நாட்டிற்கு எதிரான எந்தவொரு தீய செயலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எப்போதும் நீதி நிலைநாட்டப்படும் என்றும் இந்திய ராணுவம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்