தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பஹல்காம் பயங்கரவாதியின் இறுதிச் சடங்கு: விரட்டியடித்த பொதுமக்கள்

1 mins read
6e9edb82-b6a0-4884-b32d-264ad8d51cd5
பயங்கரவாதி ஹபீப் தாஹிரின் இறுதிச் சடங்கு குய்யான் என்ற கிராமத்தில் நடைபெற்றது. - படம்: ஊடகம்

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஹபீப் தாஹிரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி, அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ரகசிய இடத்தில் பதுங்கியிருப்பது குறித்து தெரிய வந்தது.

இதையடுத்து, இந்தியப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையின்போது 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்களில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஹபீப் தாஹிர் உட்பட மூவர் அடங்குவர். இந்நிலையில், பாகிஸ்தான் நிர்வாகத்தின்கீழ் உள்ள குய்யான் கிராமத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தலைவர் ரிஸ்வான் ஹனிப்பும் அவரது கூட்டாளிகளும் வந்தபோது உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக, ஹபீப் தாஹிர் குடும்பத்தார், லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்பதை விரும்பவில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினர்.

இதனால் ஆவேசமடைந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நிலையில், பொதுமக்கள் ஒருசேர எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் பின்வாங்க வேண்டியிருந்தது.

இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதன் மூலம், பஹல்காம் தாக்குதலுக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள தொடர்பு மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

மேலும், பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் மீது பொதுமக்கள் மிகுந்த விரக்தியில் இருப்பது தெரிய வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்