புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பது பிரதமர் மோடிக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி ஜூன் 6ஆம் தேதி காலை ஜம்மு, காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக பிரதமரின் இந்தப் பயணத்தை விமர்சித்து காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
அதில், பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு காஷ்மீரில் நடைபெற்ற மேலும் சில தாக்குதல் சம்பவங்கள் குறித்து வெளியான பல்வேறு தகவல்களை மத்திய அரசு மறுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
“ஏப்ரல் 22ஆம் தேதியன்று பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்பான பயங்கரவாதிகள் இன்னும் பிடிபடவில்லை என்பது நிச்சயம். இதைப் பிரதமர் மோடியும் அறிந்திருப்பார்.
“மேலும், டிசம்பர் 2023ல் பூஞ்ச் பகுதியிலும் அக்டோபர் 2024ல் ககாங்கீர் குல்மார்க் பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அண்மைய தாக்குதலில் ஈடுபட்ட அதே பயங்கரவாதிகள்தான் அவ்விருந்து சம்பவங்களில் ஈடுபட்டதாக சில தகவல்கள் வந்துள்ளன,” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமது ஜம்மு காஷ்மீர் பயணத்தின்போது, பிரதமர் மோடி ஜம்மு - ஸ்ரீநகர் இடையே உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் இந்தியாவின் முதல் கம்பிவழி ரயில் பாலம் என்ற பெருமைக்குரிய அஞ்சி பாலத்தைப் பார்வையிட்டு திரு மோடி திறந்து வைக்கிறார் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், பிரதமரின் பயணத்தைக் குறிப்பிட்டு மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.