சென்னை: சென்னையைச் சேர்ந்தவர் பிரதீப் முத்து.
விளையாட்டு நிகழ்ச்சிகளில் நேரடி வர்ணனை வழங்குபவர் இவர்.
அண்மையில் இவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சன்னலோர இருக்கைக்காகத் தான் கூடுதல் கட்டணம் செலுத்தியதாகவும் ஆனால் விமானத்தில் அமர்ந்ததும் ‘சுவர்’தான் அருகில் இருந்ததாகவும் இவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பதிவில் செல்ஃபி படம் ஒன்றை வெளியிட்டு, @இண்டிகோ6E சன்னலோர இருக்கைக்குப் பணம் கட்டினேன். சன்னல் எங்கே என்று இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இணையவாசிகள் சிலர், கட்டணம் சன்னலோர இருக்கைக்குத்தான். சன்னலையே கேட்டால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளனர்.
இண்டிகோ உங்கள் இருக்கையைக் கற்பனைப் பிரிவுக்கு மேம்படுத்தியுள்ளது. அதில் உங்கள் கற்பனைக்கேற்ப சன்னலை அமைத்துக்கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார் மற்றொருவர்.
மேலும் சிலர், இண்டிகோ விமான நிறுவனம் அயர்லாந்தின் ரையன்ஏர் நிறுவனத்தைப் பின்பற்றியுள்ளது என்று நினைவுபடுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதேபோலச் சன்னலோர இருக்கைக்குப் பணம் கட்டிய ரையன்ஏர் பயணி ஒருவர் தனக்கு வேறு இருக்கை ஒதுக்கப்பட்டதைப் பதிவிட்டிருந்தார்.
ஆடவர் ஒருவர் ‘சன்னலோர’ இருக்கை எனத் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருக்கும் படத்தையும் வெளியிட்டு நம்ப முடியாத அனுபவம் என்று அவர் கூறியிருந்தார்.
அதை மறுபதிவு செய்த ரையன்ஏர் நிறுவனம், “முறைத்துப் பார்ப்பதால் அது மாறிவிடாது,” என்று நகைச்சுவையாகப் பதிலளித்திருந்தது.


