புதுடெல்லி: அடுத்தடுத்து நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தினக்கூலிகள், தற்காலிகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என அந்த ஆணையம் கூறியுள்ளது.
“1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு ‘135பி’ன்படி எந்த ஒரு வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் அமைப்பில் பணிபுரிபவர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்,” என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த விடுப்பு தொடர்பாக ஊழியர்களின் ஊதியத்தில் எந்தவிதப் பிடித்தமும் செய்யப்படாது என்றும் விதிகளை மீறும் எந்தவோர் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும், கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள எட்டுத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
எனவே, மேற்குறிப்பிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

