டோனல்ட் டிரம்ப்புடன் தொடர்புடைய பாகிஸ்தான் உடன்பாடு

2 mins read
17790dec-062f-4b16-8327-51deb92d6139
(இடது) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடும்பத்துடன் தொடர்புடைய உடன்பாட்டைப் பாகிஸ்தான் செய்துகொண்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சென்ற அமெரிக்க குழுவைத் தனிப்பட்ட விதத்தில் ராணுவத் தலைவர் அசிம் முனிர் (வலது) வரவேற்றார். - கோப்புப் படம்:

புதுடில்லி: ஜம்மு, கா‌ஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சில நாள்களுக்கு முன் பாகிஸ்தானில் கையெழுத்தான உடன்பாடு புதுடில்லியிலும் அமெரிக்காவிலும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அந்த உடன்பாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடும்பமும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனிரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தனியார் மின்னிலக்க நாணய நிறுவனமும் பாகிஸ்தானில் ஒரு மாதம் முன் தொடங்கப்பட்ட மின்னிலக்க நாணய மன்றமும் உடன்பாடு செய்துகொண்டன. அமெரிக்காவின் வேர்ல்ட் லிபெர்ட்டி ஃபைனான்‌ஷியல் (World Liberty Financial) நிறுவனம் அதிபர் டிரப்பின் குடும்பத்துடன் தொடர்புடையது.

மின்னிலக்க நாணயத்தையும் நிதி தொழில்நுட்ப தொடர் முதலீடுகளையும் கவனித்துக்கொள்ளும் அந்த நிதித் தொழில்நுட்ப நிறுவனத்தில் திரு டிரப்பின் மகன்கள் எரிக்கும் டோனல்ட் ஜூனியரும் பெரும்பாலான பங்குகளை வகிக்கின்றனர். திரு டிரம்ப்பின் மருமகன் ஜெரட் கு‌ஷ்னர் ஒட்டுமொத்த நிறுவனத்தில் 60 விழுக்காட்டுப் பங்குகளைக் கொண்டிருக்கிறார்.

கடந்த மாதம் பாகிஸ்தானின் மின்னிலக்க நாணய மன்றத்துடன் அமெரிக்க நிறுவனம் உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

அமெரிக்காவிலிருந்து முக்கிய நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழு உடன்பாட்டில் கையெழுத்திட இஸ்லாமாபாத்துக்குச் சென்றது. பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனிர் தனிப்பட்ட விதத்தில் குழுவை வரவேற்றார். அதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ‌‌ஷபாஸ் ‌‌‌‌ஷரிஃபுடன் திரு முனிர், அமெரிக்கக் குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

திரு முனிரின் நேரடி ஈடுபட்டால் உடன்பாட்டுக்கும் பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக்கும் இடையில் சம்பந்தம் இருக்குமா என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து வேர்ல்ட் லிபெர்ட்டி ஃபைனான்‌ஷியல் நிறுவனம் உடன்பாட்டுக்குப் பின்னால் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று குறிப்பிட்டது.

எனினும், அதிபர் டிரம்ப்பின் குடும்பமும் வெள்ளை மாளிகையும் அந்த விவகாரம் குறித்து இதுவரை மௌனமாக உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்