புதுடெல்லி: பாகிஸ்தானின் வான்வெளித் தடை நீடித்துவரும் நிலையில், இந்திய விமானங்களுக்கான மாற்றுப்பாதையை உருவாக்க இந்திய அரசு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த 2025 ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதித்தது.
இந்தத் தடையை அக்டோபர் 24 வரை நீட்டித்து பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மேற்கு நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள் கூடுதல் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வாக, சீனாவின் சின்ஜியாங் மாநிலத்தில் உள்ள ஹோட்டன் வான்வெளியைப் பயன்படுத்தி மாற்றுப்பாதை அமைப்பது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு சீனாவுடன் ஆலோசித்து வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ மூலம் பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தால் வான்வெளி எல்லைகள் மூடப்பட்டன.
சீனாவுடனான இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், இந்திய விமான நிறுவனங்களின் எரிபொருள் விரயமும் பயண நேரமும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
