தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் மேற்கு எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய ராணுவம்

2 mins read
3e2fff7d-e168-46ac-9d66-3869a76d590a
ஸ்ரீநகரிலிருந்து 110 கி.மீ. தூரத்தில் உள்ள உரி பகுதியின் சலாமாபாத் கிராமத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் சேதமுற்ற வீட்டுக்கு வெளியே நிற்கும் மாது. - படம்: ஏஎஃப்பி

ஜம்மு/ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆயுதப்படை வியாழக்கிழமை இரவும் வெள்ளிக்கிழமை அதிகாலையும் இந்தியாவின் மேற்கு எல்லை முழுவதும் ஆளில்லா வானூர்திகளையும் வெடிபொருள்களையும் கொண்டு தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

“வானூர்தித் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. சண்டைநிறுத்த மீறல்களுக்கு உரிய பதிலடியும் தரப்பட்டது,” என்று கூறிய ராணுவம், அனைத்துக் ‘குற்றங்களுக்கும் உறுதியுடன் பதிலடி தரப்படும்’ என எச்சரித்தது.

இந்திய ராணுவத்தின் அறிக்கைக்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து உடனடியாகப் பதில் எதுவும் வரவில்லை.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகரிலும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரிலும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதை முன்னதாக பாகிஸ்தான் மறுத்திருந்தது.

காஷ்மீரின் சம்பா பகுதிக்குள் வியாழக்கிழமை இரவு நுழைவதற்கான முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்தது. உரி பகுதியில் வெள்ளிக்கிழமை குண்டுவீச்சுத் தாக்குதல் தொடர்ந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“உரி பகுதியில் குண்டுவீச்சில் பல்வேறு வீடுகள் தீக்கிரையாகின. விடிய விடிய நடந்த தாக்குதலில் மாது ஒருவர் கொல்லப்பட்டதுடன் வேறொருவர் காயமுற்றார்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்தியாவின் எல்லை நகரான அமிர்தசரசில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அபாய ஒலி எழுப்பப்பட்ட நிலையில், குடியிருப்பாளர்கள் வீடுகளுக்குள் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நள்ளிரவில் பதிலடி கொடுத்த இந்தியா

இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

பாகிஸ்தானின் கராச்சி நகர் மீது இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானில் லாகூர் நகரம் இந்தியப் படைகளின் தாக்குதலால் கிட்டத்தட்ட பந்தாடப்பட்டதாகவும், பெஷாவரில் ஐந்து முறை பெரும் குண்டுச்சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவம் நேரடித் தாக்குதல் மேற்கொள்ளாமல், கொரில்லா வகை தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டுள்ளது என்றும் காஷ்மீரில் உள்ள பதான்கோட் ராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, பாகிஸ்தான் வான்வெளியில் ஊடுருவிய இந்தியா, திடீர் தாக்குதலை நடத்தி வருவதாக வெளியான தகவலையடுத்து விமானப் பயணிகள் மத்தியில் குழப்பமும் அச்சமும் நிலவி வருகிறது. இன்று காலை சிலவடமாநில நகரங்களில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் புதுடெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டன.

இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் செலுத்திய எட்டு ஏவுகணைகள் நடுவானில் இடைமறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டதாக ‘தி ஹிந்து’ ஊடகச் செய்தி தெரிவித்தது.

ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் இத்தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. எனினும், இந்தியாவின் நவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் மூலம் இத்தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

நள்ளிரவு வேளையில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என இந்தியத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்