புதுடெல்லி: பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என இந்தியாவின் எந்த உலகத் தலைவரும் வேண்டுகோள் விடுக்கவில்லை என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இந்திய ராணுவத்தை எண்ணி தாம் பெருமை அடைவதாகக் குறிப்பிட்டார்.
போரை நிறுத்தும்படி பாகிஸ்தான்தான் இந்தியாவிடம் மண்டியிட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை தாம் மேற்கொண்ட முயற்சியால் முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
அவ்வாறு எத்தகைய சமரச முயற்சியும் எந்த நாடும் ஈடுபடவில்லை என இந்தியாவும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். அப்போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி தருவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
“மே 9ஆம் தேதி இரவு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் என்னைத் தொடர்புகொண்டு, பாகிஸ்தான் மிகப் பெரிய தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“பாகிஸ்தானின் நோக்கம் அவ்வாறு இருந்தால், அதற்கு மிகப் பெரிய விலையை அந்நாடு தர வேண்டியிருக்கும் என நான் பதிலளித்தேன். வேறு எந்த உலகத் தலைவரும் பாகிஸ்தானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து என்னுடன் பேசவில்லை.
“மே 9, 10ஆம் தேதிகளில் பாகிஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் நம் ஏவுகணைகள் தாக்கின. இத்தனை பெரிய தாக்குதலை அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“அதன் காரணமாகவே, போரை நிறுத்தும்படி, நம்மிடம் பாகிஸ்தான் மண்டியிட்டது. இனியும், இந்தியப் படைகளின் தாக்குதலைத் தாங்கிக்கொள்ள முடியாது என பாகிஸ்தானின் ராணுவ தரப்பும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.
“பயங்கரவாதிகளும் அவர்களது முகாம்களும்தான் நம் படைகளின் இலக்கு என்பதால், அதை எட்டிவிட்ட மனநிறைவுடன் சண்டையை நிறுத்த முடிவு செய்தோம்,” என்றார் பிரதமர் மோடி.