புதுடெல்லி: மத்திய கிழக்கில் நிலவிவந்த போர்ச்சூழலுக்குத் தீர்வுகாணும் வகையில் அமெரிக்காவும் ஈரானும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.
இது மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில் அமெரிக்கா, ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் வெளிப்படையான பங்களிப்பு, புதுடெல்லி நிர்வாகத்துக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவித்திருக்கிறது.
போர் நிறுத்தமானது, ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற, சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கும் உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் என இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நீடித்துவரும் மோதல் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் எனில், பதற்றத் தணிப்பு நடவடிக்கைகளும் பேச்சுவார்த்தை, அரசதந்திரம் ஆகியவையும் அவசியம் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அதன் வெளியுறவு அமைச்சு கூறியது.
இதுநாள் வரை நடந்த மோதல் காரணமாக, மக்கள் அளவற்ற துன்பத்தை எதிர்கொண்டதாகவும் உலகளாவிய எரிசக்தி விநியோகம், வர்த்தகக் கட்டமைப்புகள் சீர்குலைந்துவிட்டது என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.
இந்நிலையில், போர் நிறுத்த அறிவிப்பு எரிசக்திப் பற்றாக்குறையால் அவதிப்படும் இந்தியாவுக்கு நற்செய்தியாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் போர் நிறுத்த அறிவிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
போர் நிறுத்தத்துக்கான பங்களிப்பின் மூலம் உலக அளவில் பாகிஸ்தானின் அரசதந்திர மதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் இத்தகைய சூழலானது, பிரதமர் மோடி வகுத்துள்ள வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இரு நாடுகளுக்கு இடையே இந்தியா ஒரு தரகரைப் போல் செயல்பட முடியாது என்று அண்மையில் மத்திய கிழக்கு சூழல் தொடர்பாக விவாதிக்கக்கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானின் பங்களிப்பைத் திரு மோடி அரசு குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ கூறியுள்ளது.
பாகிஸ்தானின் இந்த முயற்சி உலக அளவில் அதன் செல்வாக்கைப் பெரிதாக உயர்த்திவிடவில்லை என்றாலும் வாஷிங்டன் நிர்வாகத்துடனான அந்நாட்டின் உறவுகள் வளர்ந்துவருவது இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

