புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆப்பரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
அப்போது, இந்தியப் படையின் ரஷ்யத் தயாரிப்பான எஸ்-400 வான் தற்காப்பு அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டிருந்த இடத்தைக் கண்டறியப் பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டதாக ஓய்வுபெற்ற இந்திய ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அதற்காக இந்திய எல்லைக்குள் செயல்பட்டுவந்த உளவு அமைப்புகளையும் கட்டளைக்காகக் காத்திருத்த (sleeper cell) தீவிரவாதப் பிரிவுகளையும் பாகிஸ்தான் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எஸ்-400 வான் தற்காப்பு அமைப்பின் அச்சுறுத்தல் காரணமாகப் பாகிஸ்தானியப் போர் விமானங்கள் இந்திய எல்லைக்கு 200 கிலோமீட்டர் தொலைவுக்குள் கூட நெருங்க முடியாமல் பின்வாங்கின என்றார் திரு மிஸ்ரா.
இந்தியாவின் ரேடார் தாக்குதலால் பாகிஸ்தானின் தரைவழி கட்டுப்பாட்டு நிலையங்கள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாடு வான்வழி எச்சரிக்கை, கட்டுப்பாட்டு அமைப்பான ‘ஏவாக்ஸ்’ வான்வழி எச்சரிக்கை விமானங்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவ்வேளையில் சர்கோதாவிலிருந்து பறந்த பாகிஸ்தானின் ‘ஏவாக்ஸ்’ விமானத்தை, இந்திய எல்லைக்குள் இருந்தபடி எஸ்-400 ஏவுகணை மூலம் 314 கிலோமீட்டர் தொலைவில் சுட்டு வீழ்த்தி இந்திய விமானப்படை வரலாற்றுச் சாதனை படைத்தது. உலக ராணுவ வரலாற்றிலேயே தரைப்பகுதியில் இருந்து மிக நீண்ட தூரத்திலுள்ள இலக்கைத் தாக்கிய முதல் நிகழ்வாக இது பதிவானது.
பயங்கரவாத முகாம்களை மட்டுமே இலக்கு வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் இந்திய அரசு துல்லியமான வழிகாட்டுதல்களை வழங்கியதாகத் திரு மிஸ்ரா கூறினார்.
இத்தாக்குதல் நடவடிக்கையில் இந்தியப் பெண் போர் விமானிகள் முக்கியப் பங்காற்றினர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முரிட்கே தலைமையகத்தை அழித்தனர்.


