பாகிஸ்தான் 1,000 ஆண்டு போர் கொள்கையை பின்பற்றுகிறது: இந்திய முப்படைத் தளபதி

2 mins read
86c411f3-5ea8-4b42-8aea-1c5c8d01573a
இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான். - படம்: ராய்ட்டர்ஸ்

புனே: பாகிஸ்தானுடன் ஏற்பட்ட ராணுவ மோதலில் இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், “மே 10ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் பாகிஸ்தானில் இருந்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தானின் நோக்கமானது இந்தியாவை 48 மணிநேரத்தில் மண்டியிட வைப்பதாகும். ஆனால், எட்டு மணிநேரத்தில் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் முன்வந்தனர்,” என்றார்.

மேலும் அவர் தமது உரையில், “இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து என்னிடம் கேட்கப்பட்ட போது, அது முக்கியமல்ல, போரின் முடிவும் எவ்வாறு செயல்பட்டீர்கள் ஆகியனவே முக்கியம் என்றேன்.

“குறிப்பிட்ட தரவுகளை உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்வோம். எத்தனை விமானங்களை அழித்தோம், எத்தனை ரேடார்களை அழித்தோம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.

“வான்வழிப் போரைப் பொறுத்தவரை ஆபரேஷன் சிந்தூர் வரலாறு படைத்துள்ளது. எதிரிகளுக்கு எதிராக வெற்றிகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் வான் பாதுகாப்பு வலையமைப்புகளில் ஊடுருவி, துல்லியமாகவும் ஆழமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டது.

“இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு வகையான திறன்களை கொண்டு தாக்குதலுக்கு முயற்சித்தன, எனவே இதில் ஆபத்தின் அளவும் அதிகமாக இருந்தது. நமது முழுமையான திறனை போர்க்களத்தில் வெளிப்படுத்தவில்லை. நம்மிடம் மிகச் சிறந்த வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன.

“1965ஆம் ஆண்டு ஐநா பாதுகாப்பு மன்றத்தில் பேசிய அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஸுல்ஃபிகர் அலி புட்டோ, இந்தியாவுக்கு எதிராக ஆயிரமாண்டு போரைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.

“தற்போதைய பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிர் தெரிவித்த கருத்துகள் அதனையொட்டியே உள்ளன.

“ஸுல்ஃபிகர் அலி புட்டோ கூறிய கருத்துகளையே அவை நினைவூட்டுகின்றன. இந்தியாவுக்கு எதிராக ஆயிரமாண்டு போர்க் கொள்கையையே பாகிஸ்தான் பின்பற்றுகிறது.

“பாகிஸ்தானில் உள்ள அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும் என்பதே ஆபரேஷன் சிந்தூரின் குறிக்கோளாக இருந்தது. பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது.

“இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் முதல் பயங்கரவாத சம்பவம் அல்ல இது. மேற்கத்திய நாடுகளில் ஓரிரு பயங்கரவாத சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால், இந்தியாதான் அதிகபட்ச பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. கிட்டத்திட்ட 20,000 பேர் பயங்கரவாத தாக்குதல்களால் பலியாகிவிட்டனர்,” என்றார் தளபதி அனில் சவுகான்.

குறிப்புச் சொற்கள்