புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முஸ்லிம் தலங்களுக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகப் பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ள கருத்து அபத்தமானது என்றும் வெறுப்புணர்வுடன் வெளிப்படுத்தப்பட்ட, திட்டமிட்ட அரசியல் தாக்குதல் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வாரணாசியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பிற முஸ்லிம் தலங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எக்ஸ் தளத்தில் அதிபர் சர்தாரி கருத்துப் பதிவிட்டதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து, பாகிஸ்தான் அதிபரின் இந்தத் தேவையற்ற கருத்துகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க பாகிஸ்தான் அதிபருக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை என்றும் பாகிஸ்தானில் மனித உரிமைகள் படுமோசமான நிலையில் உள்ளது என்பதை இந்தியா சுட்டிக்காட்ட விரும்புகிறது என்றும் திரு ஜெய்ஸ்வால் கூறினார்.
பல்வேறு சமயங்களைச் சேர்ந்த சிறுபான்மையினரைத் திட்டமிட்டு, குறிவைத்து அவர்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் பாகிஸ்தானின் நீண்டகால வரலாறு அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள திரு ஜெய்ஸ்வால், அதிபர் சர்தாரியின் கருத்துகள் பாகிஸ்தானின் மதவெறி, வெறுப்புக் கொள்கைகளால் அரசியல், மதரீதியாக தூண்டப்பட்டவை என விமர்சித்தார்.
பல ஆண்டுகளாக பல்வேறு அரசு சாரா அமைப்புகளும் கண்காணிப்புக் குழுக்களும் இந்துக்கள் உள்ளிட்ட சமூகத்தினருக்கு எதிராகப் பாகிஸ்தானில் நீடித்துவரும் சமய அடிப்படையிலான வன்முறையைச் சுட்டிக்காட்டி வருவதாகத் திரு ஜெய்ஸ்வால் கூறினார்.
சமயச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, பாகிஸ்தானில் தங்குதடையின்றித் தொடர்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

