இந்திய விவகாரங்கள் குறித்து கருத்துரைக்க பாகிஸ்தானுக்குத் தகுதியில்லை

இந்திய வெளியுறவு அமைச்சு சாடல்

இந்திய விவகாரங்கள் குறித்து கருத்துரைக்க பாகிஸ்தானுக்குத் தகுதியில்லை

1 mins read
9d28e475-7269-4832-a386-468a64036c13
இந்தியாவின் உள்நாட்டு, நீதித்துறை விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லை என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறியுள்ளார். - படம்: ஸி நியூஸ்

புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பாகிஸ்தான் அண்மையில் தெரிவித்த கருத்துகளை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு ‘எந்தத் தகுதியும் இல்லை’ என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள், நீதித்துறை செயல்பாடுகள் குறித்து தலையிடுவதற்கோ, கருத்து தெரிவிப்பதற்கோ எந்தத் தகுதியும் இல்லை என்றார் அவர்.

“நீதித்துறை, உள்நாட்டு விவகாரங்கள் முற்றிலும் இந்தியாவின் பொறுப்பு என்று மீண்டும் இந்தியா வலியுறுத்துகிறது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்தவொரு நிலைப்பாட்டையும் கடுமையாக நிராகரிக்கிறது,” என்றார் அவர்.

பிரிவினைவாதத் தலைவர் அசியா ஆண்ட்ராபிக்கு தண்டனை அளிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரந்தீர் ஜெய்ஸ்வால், பயங்கரவாதத்துக்கு நீண்ட நாள்களாக நிதியுதவி, ஆதரவு அளித்துவரும் பாகிஸ்தான் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்துப் பேசுகிறது என்றார்.

“பயங்கரவாதம், மனித உரிமைகள் தொடர்பான தனது மோசமான நிலையிலிருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்ப பாகிஸ்தான் இவ்வாறு முயற்சி செய்கிறது. அதன் தேவையற்ற கருத்துகள் இந்தியாவின் உள்நாட்டு முடிவுகளையோ அல்லது சட்ட நடைமுறைகளையோ எந்த வகையிலும் பாதிக்காது.

“இந்தியா தனது இறையாண்மை மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் மிக உறுதியாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்