அகமதாபாத்: அயோத்தி ராமர் கோவில் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு திட்டமிட்டதாகவும் இது தொடர்பாக 19 வயது இளையரான அப்துல் ரகுமான் என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த இளையரிடம் இருந்து இரண்டு கையெறிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான், ஹரியானாவில் உள்ள உணவு விடுதியில் பணியாற்றி வந்தார். மேலும், பகுதி நேர ஆட்டோ ஓட்டுநராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், தங்களுடைய சதிச்செயலுக்காக இவரைத் தேர்வு செய்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பினர், அப்துல் ரகுமானுக்கு பயிற்சி அளித்து உத்தரப் பிரதேச மாநில அரசு அலுவலகங்களை உளவு பார்க்க நியமித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு இரண்டு கையெறிகுண்டுகளையும் வழங்கியதாகத் தெரிகிறது.
இது குறித்து எப்படியோ தகவல் அறிந்த குஜராத் காவல்துறையினர், ஹரியானா சிறப்புப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது அப்துல் ரகுமானைக் கைது செய்தனர்.
அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து ஒரு ‘பென் டிரைவ்’ மீட்கப்பட்டது. அதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இடங்களின் வரைபடங்கள், தாக்குதலுக்கான குறிப்புகள் இருந்தன.
இதன் மூலம் அயோத்தி ராமர் கோவில் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இந்நிலையில், ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது.