ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் பொய் பிரசாரம் உலகறிந்த ஒன்று என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திங்கட்கிழமை அன்று (மே 12) ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார்
“கடந்த நான்கு நாள்களாக, ஜம்மு-காஷ்மீரில் போர் சூழல் நிலவியது. பாகிஸ்தான் நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதலில் பூஞ்ச் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலில் 13 விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின. இந்தக் கடினமான சூழ்நிலையில் சகோதரத்துவத்தைப் பேணியதற்காக பூஞ்ச் மக்களுக்கு நன்றி தெரிவித்தேன்,” என்று காஷ்மீர் முதல்வர் கூறினார்.
மேலும் பேசிய உமர் அப்துல்லா, “நான் இங்குள்ள மக்களை சந்தித்துப் பேசினேன். அப்பகுதி மக்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம். மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்கியதாக பாகிஸ்தான் பொய்ப் பிரசாரம் செய்கிறது. ஆனால் மக்களுக்கும், எனக்கும் உண்மை தெரியும். பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இது, உலகிற்கே தெரியும்,” என்று அவர் சொன்னார்.

