ரூ.3 கோடி கடத்தல் பேரீச்சம்பழம் பறிமுதல்

ரூ.3 கோடி கடத்தல் பேரீச்சம்பழம் பறிமுதல்

1 mins read
ab136d26-00e2-4d73-b9a5-79f7aadb45e7
பாகிஸ்தானில் விளைந்த 364 டன் உலர் பேரீச்சம்பழங்கள் 13 சரக்குக் கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: ஏஎன்ஐ
Google News Preferred Icon

புதுடெல்லி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து (யுஏஇ) இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முயன்ற ஏறக்குறைய ரூ.3 கோடி மதிப்பிலான 364 டன் பாகிஸ்தான் உலர் பேரீச்சம்பழங்களை இந்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விளைவிக்கப்பட்ட இடத்தைத் தவறாகக் குறிப்பிட்டு அந்தப் பேரீச்சம்பழத்தை இந்தியாவிற்குள் கொண்டுவர முயன்றதாக இந்திய நிதி அமைச்சு புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்தது.

தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் குஜராத் மாநிலம், காண்ட்லா துறைமுகத்தில் 13 சரக்குக் கொள்கலன்களை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.

அவற்றில் இருந்த உலர் பேரீச்சம்பழங்கள் யுஏஇயிலிருந்து வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை பாகிஸ்தானை தாய்நாடாகக் கொண்டவை என்பது விசாரணையில் உறுதியானது.

பாகிஸ்தானிலிருந்து முதலில் துபாய்க்கு அனுப்பப்பட்டு, அங்கு வேறு கொள்கலன்களுக்கு மாற்றப்பட்டு, பின்னர் அவை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருள்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய 2025 மே 2ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி துறைமுகத்தில் சோமாலியாவிலிருந்து துபாய் வழியாகக் கொண்டுவரப்பட்டதாகப் போலி ஆவணங்கள் மூலம் தவறாக அறிவிக்கப்பட்டு, இறக்குமதி செய்ய முயன்ற ரூ.1.4 கோடி மதிப்பிலான 14 டன் பாகிஸ்தானிய ‘குக்குலு’ பிசின் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்