தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஷ்மீரை கைப்பற்ற 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்: ச‌சிதரூர்

2 mins read
7fcaff75-e037-48ee-878a-8957385d2c14
சசிதரூர். - கோப்புப் படம்: பிடிஐ

புதுடெல்லி: காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாகப் பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி சசிதரூர், இன்னும் 30 ஆண்டுகள் முயன்றாலும் பாகிஸ்தானால் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர், பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார். அந்த நாட்டில் உள்ள எதையும் இந்தியா விரும்பவில்லை என்றும் அந்த நாட்டைக் கைவிட்டுவிடுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தியா ஒரு நிலையான சக்தி. பாகிஸ்தானிடம் உள்ள எதையும் அது விரும்பவில்லை. இந்தியா தனது பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், தனது உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும், தனது இளைஞர்களுக்கு எதிர்காலத்தை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது.

பாகிஸ்தானை கைவிட்டதில் அது முற்றிலும் மகிழ்ச்சியடைகிறது. அதோடு, அது பாகிஸ்தானை தனிமைப்படுத்தி விட்டுவிடும்,” என்று தெரிவித்துள்ளார்.

“இந்தியா வைத்திருக்கும் பகுதியைப் பாகிஸ்தான் உரிமை கோருகிறது. அங்கு வசிக்கும் மக்கள் பாகிஸ்தான் மக்கள் பின்பற்றும் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு மதவெறி கொண்ட சக்தி அது.

ஆயிரம் வெட்டுக்களால் இந்தியாவை ரத்தம் சிந்தச் செய்து காஷ்மீரைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்திற்காக அவர்கள் 30 ஆண்டுகளாகப் பயங்கரவாதிகளை அனுப்பி வருகின்றனர். அவர்கள் அதைப் பெறப் போவதில்லை. அவர்கள் 30 ஆண்டுகளாகத் தோல்வியடைந்துள்ளனர். இன்னும் 30 ஆண்டுகளுக்கும் அவர்கள் தோல்வியடைவார்கள்.” என்று ச‌சிதரூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் போர் புரிய இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்றும், ஆனால் அவர்கள் விரும்பினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் சசிதரூர் கூறினார். “பாகிஸ்தானுடன் போர் புரிவதில் எங்களுக்கு ஆர்வமில்லை. ஆனால் பாகிஸ்தான் போரை விரும்பினால், அவர்கள் அதைப் பெறுவார்கள். ராணுவ மோதல் தீவிரமடைந்து வரும் நிலையிலும், இந்தியா நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறது,” என ச‌சிதரூர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்