புதுடெல்லி: முன்னாள் பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி எல்லை தாண்டிய உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்திருப்பதாக நம்பப்படுகிறது.
நாசர் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த சந்தேக நபர், பாகிஸ்தான் காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவி வகித்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையிலிருந்து தானே விருப்பப்பட்டு ஓய்வுபெற்ற அவரை ஐஎஸ்ஐ எனப்படும் பாகிஸ்தானின் உளவுத்துறை நியமித்தது என்றும் அதன் பின்னர் அவர் யூடியூப் தளத்தில் பதிவுகளைப் போட்டுவந்தார் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது.
நாசருக்கும் அவருக்குத் துணைபுரிந்த மேடம் என் (Madam N) எனும் நாவ்ஷாபா ஷெஹ்ஸாடுக்கும் இந்தியாவில் சமூக ஊடகப் பிரபலங்களை (influencers) உருவாக்கும் பொறுப்பை ஐஎஸ்ஐ ஒப்படைத்தது. அவ்விருவரும், ஐஎஸ்ஐக்கும் இந்திய யூடியூப் பிரபலங்களுக்கும் இடையே பாலமாக விளங்கினர்.
“இந்நடவடிக்கைகளில் சேர்த்துக்கொண்ட பிறகு நாசர், பாகிஸ்தான் செல்லும் சம்பந்தப்பட்ட இந்திய யூடியூப் பிரபலங்களுக்கும் டேனிஷ் எனும் தூதரக அதிகாரி உள்ளிட்டோருடனும் தொடர்பை ஏற்படுத்தித் தருவார். பின்னர் அந்நபர்கள், இந்திய யூடியூப் பிரபலங்களிடம் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒப்படைப்பர். டெல்லியில் உள்ள பாகிஸ்தானியத் தூதரகத்துக்கு அவர்கள் விருந்தினராக அழைக்கப்படுவர்,” என்று விசாரணை நடத்தும் அதிகாரிகளில் ஒருவர் விவரித்தார்.
டேனிஷ், கடந்த மே மாதம் இந்தியாவிலிருந்து தடை செய்யப்பட்டார். சுற்றுப்பயணக் காணொளிகளை இணையத்தில் பகிரும் ஜோதி மல்ஹோத்ரா எனும் பெண்ணை ஹரியானா காவல்துறை கைது செய்த பிறகு டேனிஷ் தடை செய்யப்பட்டார்.
இந்தியப் படைகளின் நடவடிக்கை குறித்து ஐஎஸ்ஐக்குத் தகவல் அளித்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு யூடியூப் பிரபலமான ஜஸ்பீர் சிங் மீதான விசாரணையிலும் நாசர் சம்பந்தப்பட்டுள்ளார்.
நாசர், பாகிஸ்தானின் ஃபைசாலாபாத் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் சொத்து மேம்பாட்டாளரும் ஆவார். யூடியூபில் அவரைப் பலர் பின்தொடர்வதாகவும் (followers) அவர், பாகிஸ்தானில் தங்கள் குடும்பத்தாரைச் சந்திக்கத் துடிக்கும் இந்தியர்களுக்கு விசா வழங்கவேண்டும் எனக் குரல் கொடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

