புதுடெல்லி: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டது பரிதாபத்துக்குரிய முடிவு என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் பாரதி தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாதிகளுடனான இந்தியாவின் மோதலை (சண்டை), பாகிஸ்தான் தங்களுடனான மோதலாக மாற்றியது என்றும் அவர் சாடினார்.
இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளின் பொறுப்பு அதிகாரிகள் மட்டத்தில் இன்று (மே 12) நண்பகல் 12 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்தப் பேச்சுக்கள் திடீரென மாலை வரை ஒத்தி வைக்கப்பட்டன.
இதனிடையே, சிங்கப்பூர் நேரப்படி ஏறக்குறைய மாலை ஐந்து மணியளவில் இந்திய முப்படைகளின் பொறுப்பு அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, பேசிய ஏர் மார்ஷல் பாரதி, பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
எனவே, அடுத்தடுத்த மோதலில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட எந்தவொரு சேதத்திற்கும் அந்த நாடுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்தியா அதிரடியாக மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பயன்படுத்தப்பட்ட வான் தற்காப்பு அமைப்பின் முக்கியமான அம்சங்களையும் திரு பாரதி விரிவாக விவரித்தார்.
பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள், பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்கப்பட்டது தொடர்பான காணொளிகள், புகைப்படங்களும் இந்தச் சந்திப்பின்போது வெளியிடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இந்திய - பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளின் பொறுப்பு அதிகாரிகள் ராஜீவ் ராய், காஷிஃப் அப்துல்லா ஆகிய இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையின்போது, பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தும் எனத் தெரிகிறது.
மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை:
முன்னதாக இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பு, திங்கட்கிழமை (மே 12) காலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின்போது இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
திங்கட்கிழமை காலை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளின் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர், அஜித் தோவலுடன் தனியாக ஆலோசனை மேற்கொண்டார் பிரதமர் மோடி.
இந்தியாவின் வலிமையான சுவர்
இந்தியாவின் வான் பாதுகாப்பு என்பது வலிமையான சுவரைப் போன்றது. அதைத் தகர்ப்பது அவ்வளவு எளிதல்ல. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வான் பாதுகாப்பு மிகவும் வலுவடைந்துள்ளது,” என்றார் ஏ.கே.பாரதி.
இம்முறை இந்தியத் தரப்பில் குறைவான இழப்புகளே ஏற்பட்டன. இந்தச் சண்டையோடு முந்திய சண்டைகளை ஒப்பிட இயலாது என்றும் ஒவ்வொரு மோதலும் தனித்துவமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய விமானப்படையின் எத்தனை பேர் விமானங்கள் அண்மைய தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன, விமானிகளின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதை அவர் தவிர்த்தார். முழு விவரங்களையும் தற்போது வெளியிட இயலாது என்றும் இத்தகைய மோதல்களின்போது இழப்புகள் தவிர்க்க முடியாதது என்றும் குறிப்பிட்டார்.