மும்பை: இந்திய வெளியுறவு அமைச்சர் இவ்வாரத் தொடக்கத்தில் பாகிஸ்தான் சென்றது நல்ல தொடக்கம் என்றும் இரு நாடுகளுக்கும் இடையில் உறவை மலரச் செய்யும் நடவடிக்கை அது என்றும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தெரிவித்து உள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாகிஸ்தான் சென்றிருந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இடம்பெற்றுள்ள அரசாங்கங்களின் கூட்டத்தில் பங்கேற்க அவர் இஸ்லாமாபாத் சென்றிருந்தார்.
அது குறித்து இந்திய ஊடகத்தினரிடம் கருத்துரைத்த திரு ஷெரிஃப், “பேச்சின் முன்னேற்றம் இவ்வாறு இருக்க வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தை இத்துடன் நின்றுவிடக் கூடாது,” என்றார்.
பாகிஸ்தானின் ஆளும் கட்சியாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (PML-N) உள்ளது. அந்தக் கட்சியின் தலைவராக உள்ள திரு ஷெரிஃப், தற்போதைய பிரதமர் முகம்மது ஷெபாஸ் ஷெரிஃப்பின் சகோதரர் ஆவார்.
மேலும், திரு ஷெரிஃப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரிஃப் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதல்வராக உள்ளார்.
மகளின் முதல்வர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு ஷெரிஃப், “இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்,” என்றும் “இங்கிருந்து முன்னேற்றம் தொடங்கட்டும்,” என்றும் கூறினார்.
2015 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு திடீரென பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்தும் அவர் தமது கருத்துகளைப் பரிமாறினார்.
“நாம் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடங்க வேண்டும். கடந்த 75 ஆண்டுகளை இழந்துவிட்டோம். அடுத்து வரும் 75 ஆண்டுகளை நாம் இழந்துவிடக் கூடாது என்பது முக்கியம்.
தொடர்புடைய செய்திகள்
“நான் உறவை சீர்ப்படுத்த முயன்றேன். ஆனால் அந்த முயற்சிகள் மீண்டும் மீண்டும் சீர்குலைந்தன,” என்றார் அவர்.
இதற்கிடையே, இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டாரை ஜெய்சங்கர் சந்தித்து சடங்குபூர்வ கலந்துரையாடல் நடத்தியதாக வியாழக்கிழமை (அக்டோபர் 17) பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆனால், அப்படி ஒரு சந்திப்பு நிகழவில்லை என்று இந்தியத் தரப்பில் மறுப்பு வெளியாகி உள்ளது.
“இந்தப் பயணம் எஸ்சிஓ (SCO) அரசாங்கங்களின் கூட்டத்திற்கானது என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். அந்த நிகழ்வையொட்டி சில கைகுலுக்கல்கள் இடம்பெற்றன. மற்றபடி வேறொன்றும் நிகழவில்லை,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறினார்.