இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள் கடத்தி வந்த பாகிஸ்தான் டிரோன்கள் தாக்கி அழிப்பு

2 mins read
68cc2b2f-10bf-4382-92c9-62e5302ddc43
நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி வரை பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட 255 டிரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. - படம்: ஊடகம்

சண்டிகர்: நடப்பாண்டில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஆளில்லா சிறிய ரக வானூர்திகள் (’டிரோன்’கள்) இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன.

அந்த ‘டிரோன்’களில் ஆயுதங்களும் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களும் கடத்தி வரப்பட்டதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. மொத்தம் 255 டிரோன்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதற்காக ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியா மீது மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தாக்குதல் முடிவுக்கு வந்தபாடில்லை. அண்மையில்கூட டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்ததில் அப்பாவிகள் பலர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில், இந்திய எல்லைப் பகுதிக்குள் டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்திக் கொண்டுவரப்படுவதை முறியடித்ததாக பஞ்சாப் மாநில எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐஜி அதுல் புல்ஸ்லே தெரிவித்துள்ளார்.

பனிக்காலத்தில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களால் தொலைவில் உள்ள பகுதிகளைக் கண்காணிக்க முடியவில்லை என்றும் இச்சூழலைப் பயன்படுத்தி சிறிய ரக விமானங்கள் மூலம் இந்தியாவுக்குள் ஆயுதங்களும் போதைப்பொருள்களும் கடத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி வரை பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட 255 டிரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றில் 191 ஆயுதங்கள், 12 கையெறி குண்டுகள், 10 கிலோ வெடிபொருள்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், 329 கிலோ ஹெராயின், 16 கிலோ மெத் ஆம்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்