எல்லை தாண்டிய காதல்: இந்திய-பாகிஸ்தானிய இணையர் கைது

எல்லை தாண்டிய காதல்: இந்திய-பாகிஸ்தானிய இணையர் கைது

2 mins read
6b3b316d-e2d7-4a25-a819-72fecd0fb096
பாகிஸ்தானின் ஹைதராபாத்தைச் சேர்ந்த இக்ரா ஜீவானியும் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவும் நேப்பாளத்தில் திருமணம் செய்துகொண்டனர். படம்: இந்திய ஊடகம் -

பெங்களூரு: காதலனைக் கைப்பிடிப்பதற்காக கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைந்த 19 வயது பாகிஸ்தானியப் பெண் பெங்களூரில் கைதுசெய்யப்பட்டார்.

இக்ரா ஜீவானி என்ற அப்பெண்ணுக்குப் புகலிடம் அளித்ததற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது முலாயம் சிங் யாதவும் கைதானார்.

பெங்களூரில் கடந்த ஏழாண்டுகளாகப் பாதுகாவலராக வேலை செய்துவந்தார் முலாயம்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்குமுன் 'லூடோ' இணைய விளையாட்டுச் செயலி வழியாக அவருக்கும் இக்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியதாக பெங்களூரு காவல்துறை கூறியது.

முதலில் இக்ரா பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது முலாயமிற்குத் தெரியாது. அது தெரியவந்த பின்னரும் இருவரும் மணம்புரிந்துகொள்ள முடிவுசெய்தனர்.

பின்னர் இக்ராவை நேப்பாளத் தலைநகர் காத்மண்டுவிற்கு வரச்செய்தார் முலாயம். அங்கு இருவரும் இந்து சமய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு இருவரும் பீகார் சென்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி இக்ராவை அழைத்துக்கொண்டு பெங்களூரு திரும்பினார் முலாயம். தம் மனைவியின் பெயரை ராவா யாதவ் என மாற்றி, ஆதார் அட்டையும் பெற்றுத் தந்தார் அவர். ராவாவிற்கு இந்தியக் கடப்பிதழ் பெறவும் அவர் விண்ணப்பம் செய்திருந்தார்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள இக்ரா முயன்றதை அடுத்து, இந்திய உளவுத்துறை விழிப்படைந்தது.

இதனையடுத்து, அவர்கள் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று, விவரங்களைச் சரிபார்த்தபின், பெங்களூரு காவல்துறை அவர்களைக் கைதுசெய்தது. விவரங்களைச் சரிபார்க்காமல் அவர்களுக்கு வீட்டை வாடகைக்குவிட்ட கோவிந்த ரெட்டி என்பவர்மீதும் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

பின்னர் 'எஃப்ஆர்ஆர்ஓ' எனும் வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட இக்ரா, மேல்விசாரணைக்காக அரசு மகளிர் இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.