பாகிஸ்தான் பெண் உத்தரப் பிரதேச பள்ளி ஆசிரியராகச் சேர்ந்து மோசடி

1 mins read
85a5a3da-95fa-45e0-8159-a527f9111b49
பாகிஸ்தானில் பிறந்த ஷூமைலா கான் போலி ஆவணங்களைக் காட்டி ஆசிரியராக வேலையில் சேர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. - கோப்புப் படம்: இணையம்

பரேலி: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி ஆசிரியையாக வேலை செய்தது அம்பலமாகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம் மாதோபூர் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

அந்தப் பள்ளியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஷூமைலா கான் என்ற பெண், ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

வழக்கமாக நடைபெறும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செயல்பாட்டின் போது, அந்தப் பெண் வேலையில் சேர சமர்ப்பித்து இருந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து ஷூமைலா கானிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஷூமைலா பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும் தனது அடையாளத்தை மறைத்து போலிs சான்றிதழைச் சமர்ப்பித்து அரசு ஆசிரியர் வேலையில் அந்தப் பெண் சேர்ந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

பின்னர் 2024 அக்டோபரில் ஷூமைலா கானை பணியில் இருந்து நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், மாவட்ட கல்வி அதிகாரியின் விசாரணை மற்றும் உத்தரவின் பேரில், ஃபதேகஞ்ச் பஸ்சிமி காவல் நிலையத்தில் ஷூமைலா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்