புதுடெல்லி: உள்நாட்டில் எதிர்கொண்டுள்ள தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசைத்திருப்ப இந்தியா மீது பாகிஸ்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
பலுசிஸ்தானில் அண்மையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்துடன் இந்தியாவைத் தொடர்புபடுத்தும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
ஞாயிற்றுக்கிழமை (பிப்பரவி 1) வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஒவ்வொரு முறையும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு அற்பத்தனமான கூற்றுகளை பாகிஸ்தான் முன்வைப்பதாக திரு ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
இதைவிட பாகிஸ்தான் தன் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பலுசிஸ்தான் பகுதியில் உள்ள 14 நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பலூச் விடுதலை ராணுவம் பிஎல்ஏ சனிக்கிழமை பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 84 பேர் கொல்லப்பட்டதாகவும் 18 பேர் உயிருடன் பிடிபட்டதாகவும் பிஎல்ஏ அறிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் நடைபெற்ற அத்தாக்குதலின் பின்னணியில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி குற்றஞ்சாட்டினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

