திருமலை: திருப்பதி ஏழுமலையானை வழிபடச் செல்லும் பக்தர்கள் அலிபிரியில் இருந்து திருமலைக்குச் செல்லும் நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அந்த வழியைப் பயன்படுத்தும் பக்தர்கள் குழுக்களாகச் செல்ல காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
வழக்கம்போல் அதிகாலை 5 மணியில் இருந்து நண்பகல் 2 மணி வரை பக்தர்கள் அந்த வழியில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் எனக் குடும்பத்தினருடன் வருவோர் நண்பகலுக்கு மேல் அனுமதிக்கப் படுவதில்லை. அத்துடன் இரவில் 9.30 மணிக்கு மேல் அந்த வழிக்கதவு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அலிபிரி நடைபாதையில் ஏழாவது மைல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் எதிரொலியால், திருப்பதி ஆலய நிர்வாக அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகத் திருப்பதி ஆலய நிர்வாகத்தின் பாதுகாப்பு ஊழியர்களும், காவலர்களும் நடைபாதையில் வரும் பக்தர்களுக்குக் குழுவாகவும் கவனமாகவும் செல்லுமாறு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.