புதுடெல்லி: ககன்யான் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்பட உள்ள நவீன வான்குடையை (பாராசூட்) வெற்றிகரமாக பரிசோதித்ததாக இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தெரிவித்துள்ளது.
சண்டிகரில் உள்ள சோதனை மையத்தில் கடந்த புதன்கிழமை இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக டிஆா்டிஓ கூறியது.
விமானம், ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதிக்க வேண்டிய அவசர சூழல் ஏற்பட்டால், மனிதர்கள் வான்குடையைப் பயன்படுத்துவர். அதேபோல் விமானம் தரையிறங்கும்போது, அதன் வேகத்தை மட்டுப்படுத்த டிரோக் வான்குடை பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் வான்குடையைப் பயன்படுத்தி விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் வீரர்களை பத்திரமாக தரையிறக்க முடியும்.
இதுபோன்ற வான்குடையைத்தான் டிஆர்டிஓ புதன்கிழமை பரிசோதித்தது. இதையடுத்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்திய அரசின் ககன்யான் திட்டத்தில் இந்த வான்குடையும் இணைக்கப்பட்டதாக இந்திய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘டிரோக்’ வான்குடை பரிசோதனை, ககன்யான் திட்டத்தில் முக்கியமான மைல்கல் என்று இந்த அமைச்சு கூறியுள்ளது.
மேலும், இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் அதிக சக்தி கொண்ட வான்குடைகளை வடிவமைப்பதிலும் உற்பத்தி செய்வதிலும் இந்தியா பெற்றுள்ள நிபுணத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, வான்குடைப் பரிசோதனை வெற்றி பெறுவதற்கு இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சுயசார்புடைய இந்தியாவை உருவாக்குவதில் இதுபோன்ற பரிசோதனைகள் முக்கியப் பங்களிப்பதாகக் கூறியுள்ள அவர், தற்போது கிடைத்துள்ள வெற்றி மிகப் பெரிய முன்னேற்றம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். இதற்காக சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் விண்வெளிக்குச் செல்ல தேர்வாகினர்.
இதையடுத்து, திட்டப் பணிகள் வேகமெடுத்துள்ளன. அதன் ஓர் அங்கமாக, டிரோக் வான்குடை பரிசோதனை நடத்தப்பட்டது.
ககன்யான் விண்கலம் பூமிக்குத் திரும்புவது, அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்த வான்குடை முக்கியப் பங்கு வகிக்கும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 18, 19ஆம் தேதிகளில் இதேபோன்ற வான்குடை பரிசோதனையை மேற்கொண்டது டிஆர்டிஓ.

