திருப்பதி: திருப்பதி ஏழுமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய்வதற்கு வசதியாக திருப்பதியில் எட்டு இடங்களில் இலவசத் தரிசனத்திற்கான அனுமதி வில்லைகள் (டோக்கன்) வழங்கப்பட உள்ளன.
ஜனவரி 9ஆம் தேதி முதல் அவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே 1.4 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகள் இணையம் மூலம் வழங்கப்பட்டு உள்ளன.
அன்றாடம் 20 ஆயிரம் நுழைவுச்சீட்டுகள் வீதம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான 2 லட்சம் டிக்கெட்டுகளும் இணையம் மூலமாகவே விநியோகம் செய்யப்பட்டு விட்டன.
முதியோர், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், மாற்றுத் திறனாளி பக்தர்களுக்காக வழங்கப்படும் சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. விஐபி சிபாரிசுக் கடிதங்களும் இந்த நாள்களில் ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நுழைவுச் சீட்டுகள் இல்லாத பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்றுத்தான் திருமலைக்கு சென்று சொர்க்க வாசல் வழியாக சுவாமியை தரிசிக்க இயலும்.
டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் மட்டும் திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும், தரிசன டோக்கன்களோ, டிக்கெட்டுகளோ இல்லாமல் ஜனவரி 10 முதல் 19 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது என்று தேவஸ்தானம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ள எட்டு மையங்களில் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அங்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி, உணவு, டீ, காபி போன்றவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

