புதுடெல்லி: மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் டெல்லி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுடன், திரைத்துறையைச் சேர்ந்த ‘பராசக்தி’ படக்குழுவினர் பங்கேற்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மத்திய அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், பாஜக தலைவர்களுடன் ‘பராசக்தி’ படத்தின் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோருடன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்தித் திணிப்புக்கு எதிராக வெளியாகியுள்ள பராசக்தி படக்குழுவினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகனுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று குரல் கொடுத்த நிலையில், மறுநாளே பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பராசக்தி படக் குழுவினர் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பொங்கலைப் போற்றிய மோடி
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி தமிழில் வணக்கம் எனக் கூறி பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்தார். தமிழர்கள் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும் வேளாண்மையை போற்றுவதையும் வெளிப்படுத்தும் சிறப்பு மிக்கது பொங்கல் விழா எனக் கூறினார்.
பொங்கல் விழாவை அனைத்துலகத் திருவிழாவாகக் கொண்டாடுவது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் தமிழ் மக்களுடன் பொங்கலைக் கொண்டாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.
தமிழர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆழமான தொடர்பை வெளிப்படுத்தும் திருக்குறள் இருந்துள்ளது என அப்போது பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். வாழ்க தமிழ் வளர்க பாரதம் எனக் கூறி மோடி உரையை நிறைவு செய்தார். இந்த பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முன்னதாக ஜனநாயகன் படத்தை பாஜகவின் மத்திய அரசு முடக்க முயற்சி செய்வது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல். தமிழர்களின் குரலை உங்களால் ஒருபோதும் ஒடுக்க முடியாது மிஸ்டர் மோடி என ராகுல் காந்தி விமர்சித்தார். ‘ஜன நாயகன்’ படத்தைத் தடுப்பதற்காக தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் முயற்சிக்கிறது என்றும், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல் எனவும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

