பெற்றோரைக் கவனிக்காவிட்டால் பிள்ளைகளுக்குக் கொடுத்த சொத்தைத் திரும்பப் பெறலாம்: உயர் நீதிமன்றம்

பெற்றோரைக் கவனிக்காவிட்டால் பிள்ளைகளுக்குக் கொடுத்த சொத்தைத் திரும்பப் பெறலாம்: உயர் நீதிமன்றம்

2 mins read
794cf24b-7a1a-4502-8d98-be278f762f0a
நீதி தேவதை. - படம் பிச்சாபே

மும்பை: முதுமைக் காலத்தில் தங்களைப் பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பிள்ளைகளுக்குச் சொத்துகளை எழுதி வைக்கும் பெற்றோருக்கு ஆதரவாக, மும்பை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

பெற்றோரைக் கவனிக்காத பட்சத்தில், பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம் என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

மும்பை லோயர் பரேல் பகுதியைச் சேர்ந்த 68 வயது நகைக்கடை உரிமையாளர் ஒருவர், கடந்த 2005ஆம் ஆண்டு வாங்கிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி, மகனுடன் வசித்து வந்தார்.

முதுமைக் காலத்தில் தன்னையும் தனது 60 வயது மனைவியையும் அன்போடு கவனித்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என்ற முக்கிய நிபந்தனையுடன் 2023 மே 8ஆம் தேதி அந்த வீட்டைத் தனது மகனுக்குத் தானப்பத்திரமாக அவர் மாற்றிக்கொடுத்தார்.

ஆனால், சொத்து கைக்கு வந்ததும் மகன் பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் மூத்த குடிமக்கள் நலத் தீர்ப்பாயத்தை அணுகியதைத் தொடர்ந்து, வீட்டைப் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து மகன் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, “தந்தை பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெற்றவர், அவருக்குச் சொந்த தொழிலும், பிற சொத்துகளும் உள்ளன. எனவே, உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,” என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள் முக்கியத் தீர்ப்பை வழங்கினர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

முதியோர்நலச் சட்டத்தின்படி, பெற்றோர் ஏழையா பணக்காரரா என்பது முக்கியமல்ல; பராமரிப்பு நிபந்தனைகள் மீறப்பட்டால் அந்தச் சொத்து மாற்றத்தைச் செல்லாததாக அறிவிக்கச் சட்டத்தில் இடமுண்டு எனக் கூறிய நீதிபதிகள், மகனின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

குறிப்புச் சொற்கள்
நீதிபதிதந்தைபெற்றோர்உயர் நீதிமன்றம்