பெங்களூரு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவரைக் கடிந்து கொள்ளாமல், இனியாவது நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்திய பெற்றோரைப் பலரும் பாராட்டி உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டைச் சேர்ந்த அம்மாணவரின் பெயர் அபிஷேக். 15 வயதான இவர், உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார்.
அண்மையில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானபோது, அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்திருந்தார் அபிஷேக்.
மொத்தமுள்ள 625 மதிப்பெண்ணுக்கு 200 மதிப்பெண்களை மட்டுமே பெற்றிருந்த அவர் மனமுடைந்து போனார்.
இதைக் கண்ட பெற்றோர், அவரை அடிக்கவோ கடுமையாகக் கண்டிக்கவோ இல்லை.
மாறாக, தேர்வில் 200 மதிப்பெண் பெற்றதற்காக தங்கள் மகன் உண்மையாகப் படித்தார் என்று கூறி, ஒரு கேக் வாங்கி வந்து, அதை அபிஷேக்கை வெட்ட வைத்து அவரைப் பாராட்டினர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
உறவினர்கள் புடைசூழ அபிஷேக் கேக் வெட்டும் காட்சிகள் அடங்கிய காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“எங்கள் மகனிடம் கடுமையாக நடந்துகொண்டால் தவறான முடிவுக்குத் தள்ளப்படுவான். எனவே, அடிப்பதற்குப் பதிலாக அடுத்த முறை மிக நன்றாகப் படித்து, தேர்வு எழுதுமாறு அறிவுரை கூறினோம்.
“அதனால் தோல்வியில் இருந்து மீண்டு உற்சாகமாக இருக்கிறான். அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுவேன் என உறுதி அளித்துள்ளான்,” என்று அபிஷேக்கின் தாயார் சித்ரா கூறியுள்ளார்.

