கோட்டா: காரிலேயே விட்டுச் செல்லப்பட்ட மூன்று வயதுச் சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் புதன்கிழமை (மே 15) மாலை நிகழ்ந்தது.
பிரதீப் நாகர் என்பவர் தம் மனைவி, இரு மகள்களுடன் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்றார். திருமண மண்டபத்தை அடைந்ததும், அவரின் மனைவியும் மூத்த மகளும் காரிலிருந்து இறங்கிச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, காரை நிறுத்தச் சென்றார் பிரதீப். காரிலிருந்து அனைவரும் இறங்கிவிட்டதாக நினைத்த அவர், காரைப் பூட்டிவிட்டு, திருமண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக கணவனும் மனைவியும் வெவ்வேறு குழுக்களுடன் நேரம் செலவிட்டனர்.
பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோதுதான் இளைய மகள் கோர்விகா குறித்துக் கேட்டுள்ளனர். தங்கள் இருவருடனும் அவள் இல்லாததை அறிந்து, அவளை அவர்கள் தேடினர்.
காருக்குச் சென்று பார்த்தபொழுது, பின்னிருக்கையில் அவள் சுயநினைவின்றிக் கிடந்ததைக் கண்டனர். விரைந்து அவளை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோதும், அவள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிரித்துவிட்டதாகக் காவல்துறை அதிகாரி பன்னா லால் கூறினார்.
சிறுமியின் உடலைக் கூறாய்வு செய்ய அனுமதி மறுத்த பெற்றோர், காவல்துறையில் புகார் அளிப்பதில்லை என்றும் முடிவுசெய்ததாகத் திரு லால் தெரிவித்தார்.