புதுடெல்லி: நாடு எதிர்பாராத நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது நிலைமையைச் சமாளிக்க பொருளியல் நிலைத்தன்மை நிதியம் அமைக்கும் திட்ட முன்மொழிவுக்கு மக்களவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
மேற்காசியப் போர்ச்சூழல் போன்ற நெருக்கடிகளைச் சமாளிக்க ஒரு லட்சம் கோடி ரூபாயுடன் உருவாக்கப்படும் இந்த நிதியம் உதவும் என இந்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்களவையில் துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து வெள்ளிக்கிழமை பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேற்காசியப் போரால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ள நிலையில், ரூ.1 லட்சம் கோடி பொருளாதார நிலைத்தன்மை நிதியம் அமைக்கப்படுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் கட்ட துணை மானியக் கோரிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நிதியம் முன்மொழியப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தற்போது நிலவிவரும் மேற்காசியப் போரின் தாக்கம், விநியோகச் சங்கிலியில் இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொருளியல் ரீதியில் இவ்வாறு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய எதிர்பாராத நெருக்கடிகளைச் சமாளிக்க, பொருளியல் நிதியம் உதவிகரமாக இருக்கும் என்றார்.
இதனிடையே, இந்தியா முழுவதும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு நிலவுவதாகப் புகார் எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள், மக்களவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகள் எழுப்பும் இந்தப் பிரச்சினை குறித்துத்தான் தாம் பேசிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு உட்பட, எதிர்பாராத நெருக்கடிகளைச் சமாளிக்க அரசு எவ்வாறு தயாராகிறது என்பது குறித்து நான் பேசுகிறேன். ஆனால், எதிர்க்கட்சிகள் கேட்கத் தயாராக இல்லை. அவர்கள் நாட்டின் நலன்களின் பக்கம் நிற்காமல், பொறுப்பற்ற நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனர்,” என்று நிதியமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

