புதுடெல்லி: பீகார் மாநிலம் பாட்னாவில் புதிதாகக் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தில் இடைவிடாது பெய்யும் கனமழையால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ரூ.422 கோடி செலவில் கட்டப்பட்ட அப்பாலம், கடந்த ஜூன் 11ஆம் தேதி அன்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாரால் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அசோக் ராஜ்பாத் வழித்தடத்தை உள்ளடக்கியது.
கடந்த சில நாள்களாக பாட்னாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கன்கார்பாக், ராஜேந்திர நகர், கண்காட்சி சாலை, காந்தி மைதானம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர் தேங்கி நிற்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கியுள்ள சாலைகள், வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர், போக்குவரத்து நெருக்கடி, வடிகால் உட்கட்டமைப்பு பாதிப்பு போன்ற பிரச்சினைகளால் தத்தளிக்கின்றன.
ஈரடுக்கு மேம்பாலம் இரு நிலைகளைக் கொண்டுள்ளது. மேல் தளம் 2,175.5 மீட்டர் நீளமும் கீழ்த் தளம் 1,449.3 மீட்டர் நீளமும் கொண்டவை. ஒவ்வொன்றும் 8.5 மீட்டர் அகலம் கொண்டவை.
நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டிருப்பது, உட்கட்டமைப்பின் குறைபாடு குறித்த கவலையையும் அச்சத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.