திருப்பூர்: பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததை சுட்டி ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்கள் மாதம் 12 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டு 12 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல் ஆசிரியர்கள் உட்பட இசை, தோட்டக்கலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்ட பாடங்களை அவர்கள் சொல்லித் தருகின்றனர். இவர்கள், தங்களை பணிநிரந்தரம் செய்ய தொடர்ந்து கோரி வருகின்றனர்.
இதுபற்றிக் கூறும் பகுதிநேர ஆசிரியர் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார், திமுக தேர்தல் அறிக்கையில் அரசின் அனைத்து துறைகளிலும் 10 ஆண்டுக்கு மேல் தற்காலிகமாக பணிபுரிபவர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதி எண். 181ல் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தலுக்கு முன் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது 2021 பிப்ரவரியில் நடைபெற்ற தர்மபுரி மற்றும் கன்னியாகுமரியில் நடந்த பிரசாரத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றார். திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் இது நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தந்தார்.
இவ்வாறு பகுதிநேர ஆசியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு இதுவரை அரசாணை வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதை வெளியிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.