கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமது அரசியல் வாரிசு சம்பந்தப்பட்ட முடிவை கட்சி உறுப்பினர்கள் எடுப்பர் என்று கூறியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான திருவாட்டி பானர்ஜி, “நான் கட்சியன்று,” என்று கூறினார்.
“எங்கள் கட்சி, தனியொருவர் முடிவுகளை எடுக்காத ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் கட்சியாகும். மக்களுக்கு எது ஆகச் சிறந்தது என்பதை கட்சி முடிவெடுக்கும். நம்மிடம் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் இருக்கின்றனர். இது ஒரு கூட்டு முயற்சி,” என்று வங்காள மொழிக்கான நியூஸ்18 ஒளிவழிப் பிரிவிடம் திருவாட்டி பானர்ஜி கூறினார்.
“நான் கட்சியன்று. நாங்கள்தான் இக்கட்சி. இது ஒன்றுபட்ட குடும்பமாகும். ஒன்றுபட்டுத்தான் முடிவுகளையும் எடுப்போம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைவரும் முக்கியம் என்றாலும் ‘இன்றைய புதுமுகம் நாளைய முதுமுகம்’ என்றும் திருவாட்டி பானர்ஜி குறிப்பிட்டார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் மூத்த உறுப்பினர்களுக்கும் இளம் தலைவர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து திருவாட்டி பானர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.
அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள், திருவாட்டி பானர்ஜியின் உண்மைப்பற்றாளர்களாகக் கருதப்படுகின்றனர். அதேவேளை, கட்சியின் இளம் தலைவர்கள், திருவாட்டி பானர்ஜியின் உறவினர் மகனான அபிஷேக்கின் உண்மைப்பற்றாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.
திரு அபிஷேக், திரிணாமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். அவர் கட்சித் தரநிலையில் இரண்டாம் நிலையில் இருப்பவராகவும் பார்க்கப்படுகிறார்.