இந்தியாவின் முதல் பயணிகள் விமானம் ஈராண்டுகளில் பயன்பாட்டுக்கு வரலாம்

இந்தியாவின் முதல் பயணிகள் விமானம் ஈராண்டுகளில் பயன்பாட்டுக்கு வரலாம்

படம்:

06 Oct 2026 - 7:24 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் முதல் உள்நாட்டுப் பயணிகள் விமானம் ஈராண்டுக்குள் பயன்பாட்டிற்கு வர அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதற்கான தொழில்துறை சூழலமைப்பு (Ecosystem) வேகமாக வளர்ந்து வருவதாகக் புதுடெல்லியில் இந்தியத் தர மேலாண்மை அறக்கட்டளையின் கருத்தரங்கில் அவர் குறிப்பிட்டார்.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.வி. நரேந்திரனுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற அமைச்சர், கூட்டு முயற்சிகள் மூலம் இத்திட்டம் சாத்தியமாகும் என்றார்.

இந்தியாவில் ஜெட் இயந்திரங்களைத் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அது நீண்ட கால அவகாசம் தேவைப்படும் செயல்முறை என்றார் அவர்.

இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் பிரம்மாண்ட வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், உள்நாட்டு விமான நிறுவனங்கள் ஏறக்குறைய 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 1,600க்கும் மேற்பட்ட புதிய விமானங்களுக்கு தருவிப்பு ஆணை கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

தற்போது போயிங், ஏர்பஸ் போன்ற முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதிரிப்பாகங்கள், சேவைகளைப் பெறுகின்றன.

இது விரைவில் 10 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்தர உதிரிப்பாக உற்பத்தி, மனிதவளத் திறன் மேம்பாடு, நிலையான விமானப் போக்குவரத்து எரிபொருள் தயாரிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா விரைவில் இத்துறையில் உலகளாவிய ஏற்றுமதி மையமாக உருவெடுக்கும் என்றும் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
பயணிகள்விமானம்தயாரிப்புவிமானப் போக்குவரத்துஅமைச்சர்

தொடர்புடைய செய்திகள்