கண்ணூர்: பேருந்துப் பயணச்சீட்டுக் கட்டணத்தைச் செலுத்த ‘கூகல் பே’ வசதி இல்லாதது தொடர்பாக ஏற்பட்ட தகராற்றில், நடத்துநரைத் தாக்கி அவரது மூக்கை உடைத்த பயணியைக் காவல்துறை கைதுசெய்தது.
இந்தியாவின் கேரள மாநிலம், கூத்துப்பறம்பு - பானூர் - தலச்சேரி தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அப்பேருந்தில் பயணம் செய்த கண்ணூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற ஆடவர், தன்னால் கூகல் பே வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்று பேருந்து நடத்துநரிடம் கூறினார்.
ஆனால், மின்னிலக்க வழியில் கட்டணம் செலுத்தும் வசதி இல்லை என்று 72 வயதுப் பேருந்து நடத்துநர் ராகவன் கூறியதைத் தொடர்ந்து, ரமேஷ் ஆத்திரமடைந்தார். பின்னர், ராகவனின் முகத்தில் ரமேஷ் வலுவாகக் குத்தியதில், அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது.
நடத்துநர் ராகவன் சிகிச்சைக்காக தலச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நடத்துநர் ராகவனைத் தாக்கியதைத் தடுக்க முயன்ற பேருந்து ஓட்டுநரையும் மற்றப் பயணிகளையும் ரமேஷ் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஒருவழியாக ரமேஷைக் கட்டுப்படுத்திய பயணிகள், சம்பவம் குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த கூத்துப்பறம்பு காவல்துறையினர், ரமேஷைக் கைதுசெய்தனர். பின்னர் அவர் காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ரமேஷ்மீது காவல்துறை மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்துள்ளது.


