மும்பை அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஓர் ஆடவர் 'போர்டிங் பாஸ்' எனப்படும் விமான நுழைவு அனுமதிச் சீட்டுடன் இங்கிலாந்து செல்லும் விமானத்தில் ஏறினார்.
பின்னர் தகவல்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமான நிலைய அதிகாரிகள், கடப்பிதழில் உள்ள முத்திரை எண்ணும் ஆடவரது நுழைவு அனுமதிச் சீட்டில் இருந்த முத்திரை எண்ணும் மாறுபட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
உடனடியாக அதுகுறித்து இங்கிலாந்து விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து இங்கிலாந்தில் இறங்கிய இலங்கை நாட்டவர் மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
மும்பை வந்தவுடன் ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், இம்மாதம் 9ஆம் தேதி மும்பை விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஹோட்டலில் தான் தங்கி இருந்தபோது அதே ஹோட்டலில் தங்கி இருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஆடவரின் அறிமுகம் கிடைத்ததாக அவர் கூறினார்.
இலங்கை நாட்டவர் நேப்பாளத்தின் காட்மாண்டு நகருக்கும் ஜெர்மானியர் இங்கிலாந்திற்கும் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் இருவரும் தங்களின் விமான நுழைவு அனுமதிச் சீட்டை மாற்றிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி, விமான நிலையத்தில் அவரவர் அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொண்டனர். பிறகு அங்கு உள்ள கழிவறையில் இருவரும் தங்களின் அனுமதிச் சீட்டுகளை மாற்றிக்கொண்டதாக இலங்கை ஆடவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தத் தகவலின் அடிப்படையில் காட்மாண்டு செல்லவிருந்த ஜெர்மானியரும் கைது செய்யப்பட்டார்.
இருவர் மீதும் மோசடி, சதி ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

