ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் குளிரூட்டி பழுதானதால் பயணிகள் அவதி

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் குளிரூட்டி பழுதானதால் பயணிகள் அவதி

2 mins read
1cfaa30e-0a91-49c7-8930-300268c73275
இயக்கக் காரணங்களால் மட்டுமே விமானம் தாமதமானதாகவும் குளிரூட்டி வசதி வழக்கம்போல் செயல்பட்டதாகவும்  ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: தி பிரின்ட்

புதுடெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் குளிரூட்டி அமைப்பு முற்றிலும் செயலிழந்ததால் மிகுந்த அவதிக்குள்ளானதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அக்குற்றச்சாட்டை நிறுவனம் மறுத்துள்ளது.

டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூருக்குச் செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் (SG2471) விமானம், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) மாலை 4.30 மணிக்குப் புறப்படத் தயாராக இருந்தது.

இந்நிலையில், சில காரணங்களால் அந்த விமானம் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் விமானம் 5.50 மணிக்குப் புறப்பட்ட நிலையில், தாமதத்தின்போது விமானத்தின் குளிரூட்டி வசதி முற்றிலும் செயலிழந்ததாகப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விமானத்தின் குளிரூட்டி வேலை செய்யாமல் வெப்பமான காற்று மட்டுமே வந்ததாகவும் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் வியர்வையில் நனைந்து தவித்ததாகவும் விமானப் பயணிகளின் ஒருவரான வீரேந்திர உபாத்யாய் தெரிவித்தார்.

“குளிரூட்டியைச் சரிசெய்யும் வரை எங்களை விமானத்திற்கு உள்ளேயே அமர வைத்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பயணிகள் இடையே பதற்றம் நிலவியது. பயணிகள் தங்களின் கைகளில் இருந்த புத்தகங்களை விசிறியாகப் பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக்க முயன்றனர்,” என்றும் திரு உபாத்யாய் கூறினார்.

நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து, சில பயணிகள் விமானத்தின் கதவைத் திறக்குமாறு கோபத்துடன் குரலெழுப்பினர். அதன்பின் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தலையிட்டு அவர்களைச் சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்கக் காரணங்களால் மட்டுமே விமானம் தாமதமானதாகவும் குளிரூட்டி வசதி வழக்கம்போல் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நிலவிய அதிக வெப்பம் காரணமாகவே பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டிருக்கலாம் என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

விமானம் புறப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகே குளிரூட்டி சரிவர இயங்கத் தொடங்கியதாகப் பயணிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்