கடப்பிதழ் குடியுரிமைக்கான சான்றல்ல: இந்திய வெளியுறவு அமைச்சு

கடப்பிதழ் குடியுரிமைக்கான சான்றல்ல: இந்திய வெளியுறவு அமைச்சு

2 mins read
4d8e23f7-06c5-405d-9c98-96abe1c13f4c
இந்திய மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் மட்டுமே கடப்பிதழ் வைத்துள்ளனர். - படம்: ஈடிவி

புதுடெல்லி: கடப்பிதழ் என்பது பயண ஆவணம் மட்டுமே என்றும் அது குடியுரிமைக்கான சான்றன்று என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்துலகப் பயணத்தை எளிதாக்குவதும் வெளிநாட்டில் அடையாளத்தை நிலைநாட்டுவதும்தான் கடப்பிதழ் அளிப்பதன் முதன்மை நோக்கம் என அந்த அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினர் மட்டுமே கடப்பிதழ் வைத்துள்ளனர். எனினும், கடப்பிதழ் கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நாட்டின் கடப்பிதழ் சேவைக் கட்டமைப்பு வியத்தகு வளர்ச்சி கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு குறைந்த எண்ணிக்கையில் இருந்த கடப்பிதழ்ச் சேவை மையங்களின் எண்ணிக்கை இப்போது 545ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய எண்ணிக்கையைவிட ஆறு மடங்கு அதிகமாகும்.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு கடப்பிதழ்ச் சேவை மையம் இருப்பதை உறுதிசெய்வதை இந்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலம்பெயரும் இந்திய ஊழியர்களுக்கும் அவர்கள் சென்றடையும் நாடுகளுக்கும் பாதுகாப்பானதாகவும் நன்மை பயக்கும் வகையிலும் இந்திய அரசின் கடப்பிதழ் இருப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கமென இந்திய வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்களைக் குடியுரிமைக்கானச் சான்றாகப் பயன்படுத்துவது குறித்து இந்திய அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘இமிக்ரேட் 2.0’ தளம் மூலம் இதுவரை ஏழு லட்சம் இந்திய ஊழியர்கள் குடிபெயர்வு அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“பல மில்லியன் இந்தியர்கள் எளிதில் அணுகக்கூடிய ஒரு பயண ஆவணமாகக் கடப்பிதழை மாற்றுவதே அரசின் விருப்பம். எனினும், கடப்பிதழை இந்தியக் குடியுரிமைக்கான சான்றாகக் கருத முடியாது,” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கடப்பிதழ்பயணம்வெளியுறவு அமைச்சுவெளிநாடுகுடியுரிமை