ஹைதராபாத்: சிங்கப்பூர் தீ விபத்தில் காயமடைந்த தன் மகன் மார்க் சங்கருடன் ஆந்திர மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாண் நாடு திரும்பினார்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் தனது மகனைக் கையில் தூக்கி அரவணைத்தபடி அவர் வேகமாக வெளியே செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
மார்க் சங்கர் நலமாக வீடு திரும்பியிருப்பது பவன் கல்யாணின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகன் தீ விபத்தில் சிக்கியதாகக் கிடைத்த தகவலை அடுத்து, உடனடியாகத் தன் அண்ணனும் நடிகருமான சிரஞ்சீவியுடன் உடனடியாகச் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார் பவன் கல்யாண்.
இருவரும் மார்க் சங்கருடன் ஹைதராபாத் திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் சிரஞ்சீவி.
அப்போது, “எங்கள் குழந்தை பத்திரமாக வீடு திரும்பியுள்ளார். ஆனால், அவர் இன்னும் குணமடைய வேண்டும். எங்கள் குல தெய்வமான ஆஞ்சநேய சுவாமியின் அருளால், கருணையால் அவர் விரைவில் முழுமையாக நலம்பெற்று இயல்பு நிலைக்குத் திரும்புவார்,” என்று சிரஞ்சீவி கூறினார்.

