4,000 பேரைப் புதிதாகப் பணியமர்த்த ‘பேடிஎம்’ திட்டம்

4,000 பேரைப் புதிதாகப் பணியமர்த்த ‘பேடிஎம்’ திட்டம்

2 mins read
137ae1ed-c9fd-47b0-bac6-496140fcb9be
வாடிக்கையாளர் வட்டாரத்தை விரிவடையச் செய்வதிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை வழங்குவதிலும் புதிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மும்பை: இந்தியாவின் முன்னணி நிதி தொழில்நுட்ப நிறுவனமான பேடிஎம் (Paytm) 4,000 பேரைப் புதிதாகப் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஒன்பது மாதங்களில் கட்டங்கட்டமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கட்டமைப்பை விரிவடையச் செய்வதிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை வழங்குவதிலும் புதிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 40,000 ஊழியர்கள் ‘பேடிஎம்’ல் உள்ளனர். புதிதாக 4,000 பேர் சேர்க்கப்படுவதால் அதன் ஊழியரணி 10 விழுக்காடு கூடுகிறது.

இதற்கிடையே, தனது ஊழியரணியில் 1 விழுக்காட்டு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவும் ‘பேடிஎம்’ முடிவு செய்துள்ளது. ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீட்டுக்குப் பிறகு ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என்று நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஈராண்டுகளுக்கு முன்னர் ‘பேடிஎம்’ நிதி வர்த்தகம் தொடர்பாக இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால் அது பெரிய நெருக்கடியில் சிக்கியது. ஏறத்தாழ 4,500 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

‘பேடிஎம்’ செயலியை மில்லியன் கணக்கான இந்திய மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களிடம் நிதிச் சேவைகளான கடன் பெறுவது, முதலீடு உள்ளிட்டவற்றைக் கொண்டுசேர்க்க தலைமை நிர்வாகி விஜய் சேகர் சர்மா கவனம் செலுத்தி வருகிறார்.

2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அனுபவம் வாய்ந்த மூத்த ஊழியர்களை ஈர்க்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘பேடிஎம்’, 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது தற்போது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, செயலி மேம்பாடு ஆகியவற்றில் மும்முரமாகச் செயல்படத் திட்டமிட்டுள்ளது.

“கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 800க்கும் மேற்பட்டவர்களைப் புதிதாக வேலைக்கு எடுத்துள்ளோம், மேலும் 4,000 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளோம்,” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
பேடிஎம்நிதிசெயற்கை நுண்ணறிவு