சென்னை: ராமதாஸ் - அன்புமணி இடையே நிலவி வரும் உட்கட்சி மோதல் காரணமாக, ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நீண்ட நாள்களாக கருத்து வேறுபாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கட்சி நிர்வாகிகள் இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது கட்சியின் பெரும்பான்மையான ஆதரவு அன்புமணி வசம் இருப்பதால், அக்கட்சியும் அதன் சின்னமான மாம்பழமும் அவரது கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அதனைத்தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் தன்னிச்சையாக அதிமுக கூட்டணியில் இணைந்ததாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், ராமதாஸ் ஆதரவு அணியைச் சேர்ந்த கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகனின் மகன் முகிலன் தலைமையில் “அய்யா பாட்டாளி மக்கள் கட்சி” என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்சியின் கொடியானது, பாமகவின் கொடியைப் போன்றே வடிவமைக்கப்பட்டு, அதில் ராமதாஸின் படம் இடம்பெற்றுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் அன்புமணி தரப்பு நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிடவே இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதுகுறித்து அன்புமணி தரப்பினர் கூறுகையில், “கட்சியும் சின்னமும் எங்களிடம் இருப்பதால், எங்களை எதிர்கொள்ள முடியாமல் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
“திமுகவின் தூண்டுதலின் பேரில் இந்தப் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்காததால் தேர்தல் ஆணையம் இந்தப் புதிய கட்சியைப் பதிவு செய்ய மறுத்துவிட்டது,” என்று விளக்கம் அளித்துள்ளனர்.
கட்சியில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

