புதுடெல்லி: டெல்லியில் கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற பேரணியின்போது போராட்டக்காரர்களுக்கு எதிராகக் காவல்துறை ‘பெல்லட்’ துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சாஹில் லோச்சாப் என்பவரை அழைத்துக்கொண்டு நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல்துறைத் துணை ஆணையர் அலுவலகம் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காவல்துறைத் தாக்குதலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தினார்.
திரு ராகுலின் கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து, காவல்துறைத் துணை ஆணையர் அலுவலகம் முன்பாக அவர் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ ஜூலை 20ஆம் தேதி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த சாஹில்மீது காவல்துறையினர் ‘பெல்லட்’ துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். பெல்லட் குண்டுகளால் பலத்த காயமடைந்த சாஹிலின் ஒரு கண் பார்வை தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.
“அமைதியாகப் போராடியவர்கள்மீது நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல் சட்டவிரோதமானது மட்டுமன்று அது ஒரு கடுமையான குற்றமும்கூட. இந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மாணவர்களிடம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோலப் பிரதமர் நரேந்திர மோடியும் மாணவர்களிடம் மன்னிப்பு கோரவில்லை.
“இப்போது, நீதிக்காக சாஹில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முற்படும்போது, அதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. முதல் தகவல் அறிக்கை நிச்சயம் பதிவு செய்யப்படும். நீதித்துறை விசாரணை நடைபெறும்,” என ராகுல் காந்தி தமது பதிவில் குறிப்பிட்டார்.


