லக்னோ: பல வாகனங்கள் மோதிய சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, வாகனத்திலிருந்த கோழிகளை பொது மக்கள் திருடிச் சென்றுள்ளனர்.
வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா-டெல்லி நெடுஞ்சாலையில் புதன்கிழமை (டிசம்பர் 27) அதிகாலை நடந்த இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். விபத்தில் பல வாகனங்கள் மோதிக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது பனிமூட்டம் காரணமாக பின்னால் வந்த லாரி வேகமாக மோதியுள்ளது. கறிக்கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம் நெடுஞ்சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில், கூண்டில் வைக்கப்பட்டிருந்த கறிக்கோழிகள் சாலையில் விழுந்தன.
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட காணொளி, சிலர் கோழிகளை சாக்குகளில் கட்டிச் செல்வதைக் காட்டியது.
வாகன ஓட்டுநர் திரு சுனில் குமார், கோழிகளை மக்கள் எடுத்துச் செல்வதைத் தடுக்க முயற்சித்ததாகவும் ஆனால் அவர் அதில் தோல்வி அடைந்ததாகவும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதனால், தனக்கு 250,000 ரூபாய் (S$3,965) இழப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
எனினும் இந்த திருட்டு குறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில், மக்கள் இந்த கொள்ளையை வெட்கக்கேடானது என்று வர்ணித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“மக்கள் மிகவும் உதவியாகவும் இரக்கமாகவும் இருக்கிறார்கள். கூண்டில் அடைக்கப்பட்ட காயமடைந்த கோழிகள் தப்பிச் செல்ல உதவுகின்றனர். மேலும் அவற்றின் உயிரைக் காப்பாற்றுகின்றனர்,” என்று மிஸ்டர் பி என்ற எக்ஸ் பயனாளர் கிண்டலாக எழுதியுள்ளார்.

