யானைக்கு மதம்பிடித்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம்

யானைக்கு மதம்பிடித்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம்

1 mins read
095e158d-8d33-4229-ab69-6850b653d436
மதம்பிடித்த யானை ஸ்கூட்டரை மிதித்துத் தள்ளியது. படம்: டுவிட்டர் -

மதம்பிடித்த யானை ஒன்று, மருந்துக்கடையை நோக்கி விரைந்து, அங்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை மிதிப்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இந்தக் காணொளி வலம் வருகிறது. டுவிட்டரில் மட்டும் 510,000க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 7,600 விருப்பக்குறிகளையும் காணொளி பெற்றுள்ளது.

இந்தக் காணொளியை, ஹாலிவுட் திரைப்படம் 'ஜுமாஞ்சி'யில் இடம்பெற்ற காட்சியுடன் இணையவாசிகள் சிலர் ஒப்பிடுகின்றனர். அந்தக் காட்சியில், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நகரில் வெறித்தனமாக அலையும்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், ஹூக்லி மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

யானை வருவதைக் கண்டு மிரண்ட மக்கள், அலறியடித்துக்கொண்டு நாலா திசையிலும் ஓட்டம்பிடித்தனர். சிலர் மறைவிடம் தேடி மருந்துக்கடைக்குள் புகுந்தனர்.

ஆடவர் ஒருவர் அங்கிருந்து தமது ஸ்கூட்டரை ஓட்டிச்செல்வதற்குள் யானை வந்துவிட்டதால், அவர் உடனே ஸ்கூட்டரிலிருந்து இறங்கி கடைக்குள் ஏறிவிட்டார். ஒரே நொடியில் அவரது ஸ்கூட்டரை யானை மிதித்துத் தள்ளியது.

வசிப்பிடம் அழிக்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் யானைகள் சில வேளைகளில் மனிதர்களுக்கு எதிராக மூர்க்கத்தனமாக மாறலாம்.

தங்களது யானைக்குட்டிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக பெரிய யானைகள் கருதும்போதும் அவை மூர்க்கத்தனமாக மாறக்கூடும்.