ஜெய்ப்பூர்: ஓட்டுநரில்லாமல் கார் ஒன்று தீப்பிடித்தபடி சாலையில் ஓடியதால் அவ்வழியே சென்ற வாகனமோட்டிகளும் பொதுமக்களும் அஞ்சி ஓடினர்.
இச்சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை (அக்டோபர் 12) நிகழ்ந்தது.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதில், பற்றியெரிந்தபடி கார் வந்ததைக் கண்ட இருசக்கர வாகனமோட்டிகள் சிலர், தங்கள் வாகனத்தைச் சாலையிலேயே போட்டுவிட்டு ஓடியதைக் காண முடிந்தது.
ஜிதேந்திர ஜாங்கிட் என்ற ஆடவர் அக்காரை ஓட்டிச் சென்றார். சற்று உயர்த்தப்பட்ட சாலையிலிருந்து அக்கார் இறங்கியபோது, அதன் குளிரூட்டியிலிருந்து புகை கிளம்பியதை அவர் கண்டார்.
உடனே காரிலிருந்து இறங்கிய அவர், அதன் முன்பக்கத்தைத் திறந்து சோதித்தபோது, காரின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டார்.
சில நொடிகளில் காரின் உட்புறத்திற்கும் தீ பரவி, ‘ஹேண்ட்பிரேக்’கைச் சேதப்படுத்தியது. மேலும், உயர்த்தப்பட்ட சாலையின் இறங்குவழியில் இருந்ததால் கார் தானாகவே ஓடத் தொடங்கியது.
சாலையில் நிறுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளில் மோதிய அக்கார், பின்னர் சாலைப்பிரிப்பானில் மோதி நின்றது.
அவசர அழைப்பை அடுத்து அங்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் காரைப் பற்றியிருந்த தீயை அணைத்தனர். கார் முற்றிலும் தீயில் கருகிப்போனதாக அவர்கள் தெரிவித்தனர்.