அரசின் அறிவுறுத்தலையும் மீறி எரிபொருள் நிலையங்களில் அலைமோதும் மக்கள்

அரசின் அறிவுறுத்தலையும் மீறி எரிபொருள் நிலையங்களில் அலைமோதும் மக்கள்

1 mins read
506e7737-937b-4482-a290-369336611a68
இந்திய அரசு வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறினாலும், எரிபொருள் நிலையங்களில் விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள் மக்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. - படம்: ஏஎஃப்பி

அகமதாபாத்: ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், உலக அளவில் எரிசக்தி விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் போதுமான எரிபொருள், கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளபோதிலும், தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் எரிசக்தி நிலையங்களில் குவியத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் மார்ச் 25ஆம் தேதி பேசிய இந்தியப் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, மக்கள் பதற்றமடையவேண்டாம் என்றும் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்பி எரிபொருள்களை வாங்கிச் சேமிக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

“போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. பெட்ரோல், டீசல் விநியோகத்தில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை,” என்று அவர் உறுதியளித்தார்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் சில்லறை விற்பனை விலையை நிலையாக வைத்துள்ளது.

இதற்கிடையே, தனியார் நிறுவன ஊழியரான ஆஷிஷ் சிங், எரிபொருள் நிரப்ப ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததாகக் கூறினார்.

மேலும், “எனக்கு 2,000 ரூபாய் மதிப்பிலான எரிபொருள் மட்டுமே வழங்கப்பட்டது. எரிபொருள் கலனை முழுமையாக நிரப்ப எரிபொருள் நிலைய ஊழியர்கள் மறுத்துவிட்டனர்,” என ஏஎஃப்பி செய்தியாளரிடம் மிகவும் வேதனையுடன் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்